மணிரத்தினம் மீது கோபம் ஏன்? Letter to Maniratnam
மணிரத்தினம் ! ஒரு மிகச்சிறந்த கலைஞன்.
ஒட்டு மொத்த உலகத்தின் நூறு தலைசிறந்த திரைப்படங்களின் பட்டியலில் ஒரு இந்திய-தமிழ் படத்தையும் சேர்க்கச் செய்தவர். நீலகிரி ரயில் பாதையில் A R ரஹ்மானின் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து போகும் ஒரு ரயிலை, அதன் குதூகலத்தை அப்படியே ஒரு புது விதமான ஜூம் கேமரா வழியாய் செல்லுலைடில் பதிவு செய்து, அதன் தாக்கதினாலேயே, யு.கே-வின் டாப் டென்-இல் ஒரு தமிழ்ப் பாடலை கொண்டு நிறுத்தியவர். 1947 இல் வெளியேறிப்போன வெள்ளையர்களின் இசையுலகத்தை A R ரஹ்மான் என்னும் இளம் புயல் ஆள்வதற்கான அஸ்திவாரத்தின் முதல் செங்கல்லை நிறுவியவர்.
” ஏய்…! இருங்கடா, ஒருத்தனும்
வந்து சொல்லமாட்டேங்கறான்னு, இவனுங்க ஆட்டம் போடறானுங்க. எவனாவது ஒருத்தம் வந்து சாட்சி சொல்லட்டும். அப்ப காட்டறேன் இந்த ஊருக்கு போலீஸ் பவர்னா என்னன்னு!” – என்று முஷ்டத்தை மடக்கி மீசையை முறுக்கி பக்கம் பக்கமாய் வசனம் கொண்ட காட்சியை தமிழ் சினிமாவிலிருந்து துடைத்தெடுத்தவர், தனது முற்றிலும் புதிய இந்த பாணியால் ஒருவரையும் விட்டுவைக்காமல் கமலஹாசனை கூட மாற்றிப்போட்டு, இப்படி ஒரு காட்சிக்கு அவரை ” ஒரு குற்றவாளி… ஒரு சாட்சி… போதும் !” என்று எழுத வைத்தவர்.
” நீ அழகா இல்ல, உன்ன லவ் பண்ணனும் இன்னு தோனல, ஆனா இதெல்லாம் நடந்திடும் போல இருக்கு!”, ” கூரையை பிச்சிட்டு கொட்டபோவுதுடி வெள்ளைக்காரி”, ” யானக்கா லாரி”, ” கணேசன் சார், நான் அமுதாவ தத்து எடுத்துக்கறேன், உங்க பொன்னை கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறேன். மொத விஷயத்துக்கு தேவை உங்க கையெழுத்து, ரெண்டாவது விஷயத்துக்கு தேவை உங்க சம்மதம்…” என தன் சுரீர் வசனங்களால் தமிழ் சினிமா வசனத்தை கூர்மையாக்கிப் போன , ” வசன பாரதி” என்று ஜா.ரா சுந்தரேசனால் கொண்டாடப்பட்ட தலைசிறந்த எழுத்தாளர் சுஜாதா இப்படியெல்லாம் எழுதுவற்கு தளம் அமைத்துக்கொடுத்தவர்.
தொடப்படாத, விட்டுப்போன சில நுணுக்கமான விஷயங்களை தன் படங்களில் தொட்டு நம் மனங்களை தொட்டவர்.
வெளிச்சத்தை மட்டுமே பார்த்து பழகிப்போன நம் கண்களை, பழக்கப்படாத இருட்டின் இன்னொரு பரிமானதினுள் அழைத்துச் சென்று உலகத்தர ஒளிப்பதிவை காட்டியவர்.
ஒளி, ஒலி, காட்சி அமைப்பு, திரைக்கதை, தொழில் நுட்பம், என்று எல்லாவற்றையும் உலக தரத்திற்கு கொண்டு போனவர். தன் பங்களிப்பால் தமிழ் சினிமாவிற்கு, ஏன் இந்திய சினிமாவிற்கே புது ரத்தம் பாய்ச்சியவர்.
இன்று இந்தியாவே கொண்டாடும் எங்கள் A R ரஹ்மானை கண்டெடுத்தவர் !
அட, தமிழனையே ஏற்றுக்கொள்ளாத ஹிந்திக்காரப்பயல் கூட தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரே இயக்குனர் இந்த மணிரத்தினம்.
இவ்வளவு உணர்வும், பிரியமும், மரியாதையும் இருந்தாலும், இப்போது சில நாளாய் இவர் மீது கோபம்தான் வருகிறது. கோபம்
என்றால் கொஞ்ச நஞ்சமல்ல. நிறைய கோபம் !
மணிரத்தினம் ஐயா,
உங்கள் திரைப்பட காட்சியமைப்பு என் மனத்தை ஆச்சர்ய படுத்துகிறது. ஆனால்,
உங்கள் நிஜ வாழ்க்கை நிகழ்வு - சன்னமாய் வலிக்கச் செய்கிறது.
” கன்னத்தில் முத்தமிட்டால்” வெளியான சில வாரங்களில் உங்கள் வீட்டு வாசலில் வீசப்பட்ட அந்த வெடிகுண்டு கூட ஏற்படுத்தாத ஒரு பதைபதைப்பை, ” இரண்டாவது அட்டாக். மார்பு வலியால் மணிரத்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதி” என்னும் ஒரு வரி செய்தி ஏற்படுத்துகிறது. இன்னும்
குறையமாட்டேன் என்கிறது.
இவ்வளவு தெரிந்த உங்களுக்கு, உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டுமென தெரியாதா…என்ன…?
ஏன் உங்களுக்கு மட்டும் புரியவில்லை இது ?
பெங்களூரிலிருந்து தருமபுரி செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துரையின் பலகை ஒன்றின் வாசக வரிகள் வந்து போகிறது என் மனதில்- ” Life is short, don’t make it shorter“
கடலுக்கு அப்புறம் இருக்கும் எம் அத்துணை தமிழ் மக்களும்,
இப்புறம் இருக்கும் உங்களை போன்ற சிலரும் வேண்டும் எங்களுக்கு நலமாய்!
ஒரு சிவாஜியை, சுஜாதாவை இழந்து நிற்கிறோம் நாங்கள்.
இளையராஜாவும், வைரமுத்துவும், மணிரத்னமும், A R ரஹ்மானும், ஜெயக்காந்தனும், கமல ஹாசனும், வேண்டும் எங்களுக்கு இன்னும் நிறைய நாட்களுக்கு.
உலகத்தரம் எல்லாம் அப்புறம், முதலில் உங்கள் உடல் நலம்.
” இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்”-இல் கடைசி வரிகளில் சிவாஜிக்கு வைரமுத்து சொன்னதையே தான் நானும் சொல்கிறேன் உங்களுக்கு….
” உடல் நலம் காத்து வாருங்கள் – எங்கள் செல்வம் நீங்கள்
மீண்டும் சொல்கிறேன்.
மனோரஞ்சிதம் நீங்கள்.
உங்களைக் காத்துக் கொள்ள எதற்கு ஒரு கருவாட்டுக் கூடை? “
- உணர்வும், வலியும், எழுத்தும் – பரமன் பச்சைமுத்து
: Catagory - தமிழ், Writing | மனக்குடியான்.காம்
Tags: A R Rahman, A R ரஹ்மானின், Paraman, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், கன்னத்தில் முத்தமிட்டால், கமலஹாசனை, சிவாஜி, சுஜாதா, தமிழ் சினிமா, பரமன் பச்சைமுத்து, மணிரத்னம், மனக்குடியான், வைரமுத்து
Comments (3)





loving you parama,
manam poru, kovam niruthu
manikku vandha udal nalam, udalaal thaana?
niraya yosikkum manadhu, marugi marugi, adaithu kollukirathu polum.
Udal moolam, manam pena vendum parama
un anubhukku nandri
loving you all the time
uma venkatachalam
body is nothing but an expression of the mind.
Body manifests what is there inside.
if one knows to cleanse the inner self, then the outer can be automatically safe and complete.
may be that he , maniratnam has been thinking and feeling for the world around him more ( thats what his movies say) and that upsets his heart.
if his personal practices can deal with the body and heal with the mind then it can be appropriate to take care of him and with you we all shall enjoy the masterpieces of a contemporary veteran
thanks for your expressions
loving you all ways
தமிழனுக்கு உரிய உரிமையே இது,
கோபமல்ல